தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.