தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் நாளை முதல் வரும் 12 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளிலும், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.