தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். மேலும் நாளை குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.