தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
அதுமட்டுமன்றி சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில்இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 17 ஆம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும். சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.