தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் திறனாய்வு தேர்வு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகள் மாதம்தோறும் மத்திய மாநில அரசுகள் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வறுமையில் உள்ள மாணவர்கள் அதிகமானோர் பயன்பெற்று வருகின்றனர். அதாவது ஏழ்மை காரணமாக கல்வி இடைநிற்றல் இதன்மூலம் தவிர்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் கிராமப்புற மற்றும் நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயில கூடிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எனவே இந்த ஆண்டுக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்வு எதிர்நோக்கி வரும் நிலையில், அதற்கான தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோயமுத்தூர் மாவட்டம் உடுமலையில் எஸ்.கே.பி மற்றும் மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர் உள்ளிட்ட பள்ளிகளில் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்தேர்வு குறித்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000 ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகையானது, ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.