தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு மாநில அரசு சார்பாக கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஏராளமான மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வு எழுதுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படித்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுடைய பெற்றோரின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த தேர்வு 27-ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையதளத்தில் ஊரகத் திறனாய்வு தேர்வு எழுத உள்ள மாணவர்களுடைய பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு நுழைவு சீட்டை பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா ? என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.