தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது.தற்போது கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் போது, தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் . அதன்படி கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.