9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வானது வருகிற ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது தேர்வானது மே 5ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியானது இணையதளம் வாயிலாக வழங்கப்பட திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு கற்பிக்கின்ற முதுகலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி, இசை, கலை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியானது வருகிற மார்ச் 14ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இணையதளத்தில் திறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து இந்தப் பயிற்சிக்கான காணொளி செயல்பாடுகள் முதலியன உள்ளடக்கப்பட்ட 12 கட்டகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.