தமிழகத்தில் பி.இ., பி.டெக்., ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு துவங்கியது. அதுமட்டுமின்றி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு https://www.tneaonline.org/ எனும் இணையதள முகவரியில் தொடங்க இருக்கிறது. அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் ஜூலை 22 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதன்பின் விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரை சேவை மையங்களின் வாயிலாக நடைபெறும். இதனிடையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் குறைகள் இருப்பின் களைவதற்கு ஆகஸ்ட் 9 -14ஆம் தேதி வரையில் தொடர்புகொண்டு பூர்த்தி செய்யலாம். மேலும் ஆகஸ்ட் 16 -18 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு போன்ற 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். இந்த நிலையில் M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு துவங்கியுள்ளது.
அந்த வகையில் M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர www.annauniv.edu/tanca2022 எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசு , அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வில் (TANCET ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலை வருடந்தோறும் நடத்துகிறது. இத்தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் மட்டுமே தமிழகத்திலுள்ள இந்த கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.