தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில் யுகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வழக்கம்போல் சுழற்சிமுறை இல்லாமல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜா முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது” “தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும், பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடியில் இரண்டரை வயதுக் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்று வரும் நிலையில், எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் மூலமாக பாடம் கற்று வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்” என்று அதில் தெரிவித்துள்ளார்கள்.