Categories
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு வந்த சோதனை…! குவியும் நோயாளிகள்…. திணறும் மருத்துவர்கள்..!!

கொத்து கொத்தாக பாதிப்பு, சாலைகளில் அணி வகுக்கும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள் இவையெல்லாம் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை உணர்த்தும் காட்சிகள்.

கொரோனா முதல் அலையின் போது தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மருத்துவமனைகளில் சிகிச்சைகளில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 58,000பேர் மட்டுமே. தற்போது இந்த எண்ணிக்கை 80,000தை கடந்துவிட்டது. மாநிலத்தின் தினசரி பாதிப்பு 10,000த்தை கடந்துவிட்ட நிலையில் சென்னையில் இந்த எண்ணிக்கை 3000ஆக உள்ளது. அதனால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பி விட்டன.

ஒருவர் வெளியே சென்றால் தான் மற்றவருக்கு படுக்கை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் ஆம்புலன்ஸ்சிலே காத்திருக்க நேரிடுவதாகப் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து தீர்வாக இருக்கும். அதற்கு தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரெம்டிசிவர் மட்டுமல்லாது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் டெமிபுழு, ஷீ புழு மாத்திரைகளும் சரிவர கிடைப்பதில்லை என்பது மருத்துவர்களின் ஆதங்கம். சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கிண்டி சிறப்பு சிகிச்சை மையத்திலும் கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.  அவர்களை எதிர்கொள்ள முடியாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திணறி வருகின்றனர்.

பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளின் இதர பிரிவுகளும் செயல்படுவதால் அதிக பணி சுமையை எதிர் கொள்வதோடு மருத்துவர்கள், செவிலியர்கள் நோய் தொற்றுக்கும் ஆளாக நேரிடுகிறது . சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் கவச உடை மாற்றும் அறைகள் கூட வார்டுகளாக மாற்றப்பட்டு விட்டதால் மருத்துவர்கள், செவிலியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முதல் அலையின் போது தேவையான அளவுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தனர். தட்டுப்பாடு இன்றி மருந்துகள் கிடைக்க செய்தனர். அது போன்ற நிலையை இப்போதும் ஏற்படுத்தினால் மட்டுமே , நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் அடுத்த சில தினங்களில் பேராபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |