தமிழகத்தையே உலுக்கிய தனியார் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் அதிரடி திருப்பமாக 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் பரபரப்பாக இயங்கி வந்த ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவின் மேலாளரான முருகன் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்தது. காவலாளி உட்பட 3 ஊழியர்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து மயக்கமடையச் செய்து, பின் தனது கூட்டாளிகளுக்குத் தகவல் கூறி, அவர்கள் வந்த பிறகு வங்கி மேலாளர் சுரேஷ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி, வங்கி லாக்கரை திறந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. இதனையடுத்து முருகனுக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.