திருச்சி மாவட்டத்திலுள்ள கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியாரோடு பகுதியில் புருஷோத்தமன்-ஷர்மிளா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஷர்மிளா திருச்சியிலுள்ள SBI வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தம்பதியினரின் 13 வயது மகள் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இவ்வாறு தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மாணவி திருச்சியில் அம்மாவுடன் வசித்து வருகிறார்.
இதனிடையில் வழக்கம்போல் நேற்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனது மகள் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று ஆதாரங்களை சேகரித்தனர்.
முன்பாக மாணவி தன் தாயிடம் உடல் பருமனாக உள்ளதாக தொடர்ந்து கூறி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே உடல் பருமனால் தொடர்ந்து மன வேதனையில் இருந்த மாணவி யூடியூபில் பல வீடியோ காட்சிகளை பார்த்து அதன் மூலம் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.