விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள்.
அங்கு மோகன் மற்றும் அவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் ஆகிய 5 பேரும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு வேலை சரியாக இல்லாததால், அப்பகுதியில் உள்ள சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் அவர் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் அனைவரும் அடிக்கடி மோகன் வீட்டிற்கு வந்து கடனைத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அதனால் வாழ்க்கையை வெறுத்துப் போன மோகன், தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது மனைவியிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.
இதனையடுத்து கணவன் மனைவி இரண்டு பேரும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மூன்று பேரையும் ஒவ்வொருவராக தனி அறைக்கு தூக்கி சென்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அதன்பிறகு மோகன் மற்றும் அவரின் மனைவி அதே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.