திமுக கட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்த பலர் இணையவுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆட்சிப்பட்டி பகுதியில் எதிர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது பாஜக, தேமுதிக மற்றும் அதிமுகவை சேர்ந்த 55 ஆயிரம் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் தேமுதிக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தினகரனும் திமுக கட்சியில் இணைந்துள்ளார். இவர் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, தேமுதிக கட்சியிலிருந்து நான் தற்போது திமுகவில் இணைந்துள்ளேன். என்னைப் போன்ற தேமுதிக கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். என்னுடைய தந்தை திமுக கட்சியை சேர்ந்தவர்தான். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன் தான். அதனால் நான் கட்சி மாறுவது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது. என்னுடைய பிறப்பிலேயே திமுக தான் இருக்கிறது.
நாட்டிற்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திமுக கட்சியில் இணைவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். கொரோனா காலத்தில் நாம் கைகுலுக்கவே பயந்து கொண்டிருந்தோம். ஆனால் உயிரை துட்சம் என கருதாமல் கொரோனா வார்டுக்குள் தைரியமாக நுழைந்த உத்தம தலைவர் தான் ஸ்டாலின். அவரை போல் எவரும் உண்டோ. நான் என்னுடைய ஊருக்கு பேருந்தில் செல்லும்போது எல்லாம் நம்முடைய தமிழக முதல்வர் எங்களை பேருந்தில் இலவசமாக கூட்டி செல்வது மிகவும் புண்ணியமாக இருக்கிறது என்று பெண்கள் பெருமிதத்துடன் கூறுவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் நம்முடைய முதல்வர் ஸ்டாலினை தெய்வமாக வணங்குகின்றனர். இந்தியாவிற்கு முதுகெலும்பாக விளங்குவது விவசாயம் தான். இப்படிப்பட்ட விவசாயத்திற்கு திமுக அரசு மின்சாரம் வழங்கியதால்தான் விவசாயம் செழித்துக் கொண்டிருக்கிறது. மேலும் திமுக ஆட்சி தமிழகத்தில் 100 ஆண்டுகள் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.