தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு வெளியிடும் அறிவிப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்த இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது என்பது குறித்து விசாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே அதிமுக அரசு தாக்கல் செய்திருந்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து சில மாதங்களுக்கான பட்ஜெட்டாகவே அமைத்திருந்தது. எனவே 2022 – 23 ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் திமுக அறிக்கையில் வெளியிட்டுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. ஆனால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு வழங்கும் அளவு நிதி நிலைமை இடம் கொடுக்காது. அதனால் சில பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும் என கோட்டை வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
மேலும் இந்த பட்ஜெட்டில் கல்விக்கடன் குறித்த தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள். நீட் தேர்வு ரத்து செய்வது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தக்கூடாது என மாணவர்கள் குறித்த தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசையும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கல்வி கடன் குறித்த தகவல் வெளியாகும் என கூறுகிறார்கள்.மேலும் 1.4.2003 முன்னுக்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என மொத்தம் 6 லட்சம் பேர் இருக்கின்றனர்.
இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற எந்த பலன்களும் இவர்களுக்கு கிடையாது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து அரசு ஊழியர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகளை தொடர்ந்து தமிழக அரசும் அறிவிக்கலாம். அதனை ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தலாம் என கூறுகிறார்கள். திமுக சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றில் மக்கள் பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளனர். அதனால் மக்களின் எதிர்பார்ப்பினை திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.