முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை இன்று காலை 10:30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் நீங்குமா என மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் ஆணையம் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட்டது. அரசு தரப்பு இன்று காலை 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது, இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்துள்ள சுமார் 500 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் இன்று தாக்கல் செய்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதி அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று அறிக்கை அளித்திருப்பதால், ஆறுமுகசாமி எவ்வாறான அறிக்கையை அரசுக்கு கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.