தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று (பிப்.22) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தாம்பரம் காவல்துறை பகுதியில் 5 மையங்கள், ஆவடி மாநகர காவல்துறை பகுதியில் 4 மையங்கள், சென்னை பெருநகர காவல்துறை பகுதியில் 10 மையங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 279 மையங்களில் இன்று (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில் சுமார் 259 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப் படையினர், உள்ளூர் போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முக்கியமான சந்திப்புகளிலும், இடங்களிலும் அதிவிரைவு படையினர், அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் 11,799 கண்காணிப்பு கேமராக்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
அதேபோல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் வாக்கு எண்ணும் மையங்களின் அருகில் நிறுத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1,239 காவல் ஆய்வாளர்கள், 109 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4,617 உதவி ஆய்வாளர்கள், 417 துணைக் காவல் கண்காணிப்பாளர், 6,748 ஊர்க்காவல் படை வீரர்கள், 3,143 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், 5,805 ஆயுதப்படை காவலர்கள், 18,744 உள்ளூர் போலீசார் என மொத்தம் 40,910 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் 60 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காண்பித்த பிறகு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனை செய்யப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக இன்று (பிப்.22) அதிகாலை முதலே காவல்துறையினரை ரோந்து பணியில் ஈடுபட வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.