சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் இதுதான் முதல் முறை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுக திமுக முனைப்பு காட்டி வருகிறது. ஜெயலலிதா இல்லாமல் சரியான தலைமை இன்றி தவித்து வந்த அதிமுகவில் முதல்வர் பழனிசாமி தன்னை ஆளும் மிக்க தலைவராக மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து வழக்கமாக ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்படும், ரூ.2500 வழங்கியது தேர்தலை மனதில் வைத்து அதிமுக இந்த அறிவிப்பை வெளியிட்டது என்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் வரை சென்றன.
இந்நிலையில் ஆரணி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மோகன் பேசுகையில், “வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். இதையடுத்து 2022 ஆம் வருடத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்கி தமிழக மக்களை ஆச்சரியப்படுத்துவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.