கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியில் முத்து செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் கடந்த வருடம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு குடும்ப வறுமையின் காரணமாக ஏராளமான மாணவர்கள் வேலைக்கு சென்றதோடு, படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டனர். எனவே இடைநின்ற மாணவர்களின் விவரம் குறித்து முறையாக கணக்கிட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் அதிகாரிகள் உரிய முறையில் ஆராய்ந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக உரிய முறையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், ஏராளமான மாணவர்கள் தங்களுடைய படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டனர் என்றும், இது தொடர்பான கணக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்துள்ளன எனவும் கூறினார். இதற்கு நீதிபதிகள் குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்கும் போது அவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
அதன்பிறகு மாணவர்கள் தங்களுடைய படிப்பை பாதியிலேயே கைவிடுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாகும். இதனையடுத்து மற்ற மாநிலங்களை விட தமிழகம், கேரளா கல்வியில் மிகச்சிறந்த மாநிலங்களாக திகழ்கிறது. எனவே மாணவர்கள் இடைநிற்பதை தமிழக அரசு உரிய முறையில் கையாள வேண்டும் என்று கூறினார்கள். மேலும் இடைநின்ற மாணவர்களின் புள்ளி விவரங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.