நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமது கலகலப்பான பேட்டிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சித்து வருவதுடன், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறார் இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி படித்தவர், பண்பாளர் என்று நினைத்தேன். ஆனால் அவர் பெண்களை பார்த்து நீங்கள் பஸ்ஸில் ஓசியாக தானே பயணிக்கிறீர்கள் என்று கேட்கிறார். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தானே அரசு பஸ்களை வாங்குகிறது. அப்படி இருக்கும்போது ஏதோ அவர் சொந்தமாக பஸ் விட்டுருப்பதைப் போல ஏளனமாக பேசியுள்ளார். அது மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சியில் ஒரு பெண்ணிடம் நீங்கள் தாழ்த்தப்பட்டவரா என கேட்டுள்ளார்.
அத்துடன் இருக்காமல் இந்த உரிமை எல்லாம் உங்களுக்கு பெரியார் போட்ட பிச்சை என்று அமைச்சர் பொன்முடி அதிகாரமாக தெரிவித்துள்ளார். அப்படி என்றால் மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் தமிழ் தமிழ் என்று பரப்புரை செய்து வருகிறார். ஆனால் நடைமுறையில் அரசு கோப்புகள் முதல் வணிக நிறுவனங்களில் பெயர் வரை எங்கும் தமிழ் இல்லை. இதனையடுத்து அவர் மேடைக்கு மேடை திராவிட மாடல் என்று முழங்கி வருகிறார். இதில் திராவிடம் என்பது சமஸ்கிருதம், மாடல் என்பது ஆங்கிலம் இப்படி இருக்கும்போது தமிழ் எப்படி வளரும் என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.