கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, அனைத்து மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றன. கொரோனா தாக்கம் எப்போது முடியும் ? எப்போது கல்வி நிலையங்கள் திறக்கும் ? எப்போது நாம் கல்வி பயிலலாம் ? என்று மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தமிழக அரசாங்கம் இது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கல்லூரி மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்த போது கல்லூரி மாணவர்கள் கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ட்ரெண்ட் செய்து வந்தனர். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் இன்று காலை ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர் களுக்கு பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வும், இளநிலை பொறியல் படிப்பில் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்வதாக அறிவித்தார்.