தமிழகத்தில் மின் தேவையை ஈடுசெய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கப் படுவதால் அதனைக்கொண்டு தேவையை ஈடுசெய்ய முடியாது.வடசென்னையில் 800 மெகாவாட் திறன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரு அலகுகள் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.தமிழக அரசிடம் உப்பூர், எண்ணூரில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அனல் மின் நிலையங்களில் 3 ரூபாய் முதல் மூன்றரை ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை தயாரிக்க இயலும்.
எனவே அதேவேளையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெறும் போது ஒரு யூனிட்டிற்கு நான்கு ரூபாய் முதல் நான்கறை ரூபாய் வரை வழங்க வேண்டும் எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நிலக்கரி தட்டுப்பாடு பேசுபொருள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நெய்வேலியில் கிடைக்கும் லிக்னைட் உதவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.