கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும்,
வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அரசு உதவி பெறாத சுயநிதிக் கல்லூரிகளில் மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதிக்க இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகள் மூன்று தவணைகளில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிப்பதாக அரசு தெரிவித்தது.
தற்போது 25 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என்றும், அடுத்த கட்டமாக பள்ளிகள் திறக்கும் போது 25 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள வேண்டும், பள்ளி திறந்த தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதங்களில் 25 சதவீதத்தையும் அனுமதிக்கலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.