செங்கல் சூளை நடத்துபவர்கள், மண் பாண்டம் செய்பவர்கள் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பகுதியில் உள்ள பிரச்சனை, அரசு செய்யவேண்டிய நடவடிக்கை என பல கோரிக்கை வைத்து பேசினார்கள். அதில் செங்கல் சூளை வைத்திருப்போரும், மண்பாண்ட தொழில் செய்வோரும் சுற்றுசூழல் அனுமதி பெற்று மண் எடுக்க வேண்டும் என்கின்ற நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதே கோரிக்கையை சம்மந்தப்பட்ட தொழிலார்களும் நீண்ட நாட்களாக வைத்து வந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு செங்கல் சூளை வைத்திருப்போர், மண் பாண்டம் தொழில் செய்வோர்கள் இனி மண் எடுக்க சுற்றுசூழல் அனுமதி பெற தேவையில்லை என அரசாணை வெளியிட்டுள்ளது. இவர்கள் மண் எடுக்க சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும் என்பதை நீக்கியுள்ள தமிழக அரசு, 1.5 மீட்டர் வரை மண் எடுக்க கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று எடுக்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிக அளவில் மரம் வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, கிராமப்புற சாலைகள் இலிருந்து 10 மீட்டர் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலைகள், ஆறுகள், நீர் நிலைகளில் இருந்து 50 மீட்டர் வரை மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றபடுகின்றதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.