தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா இக்கட்டான காலத்தில் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பாடம் நடத்தப்படும் என்று தெரிகிறது. பள்ளிக்கூடம் முடிவடைந்ததும் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும் இது முழுக்க முழுக்க தரவுகள் மூலம் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த மையங்களுக்கு அனுப்பவேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முதல்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.