தமிழகத்தில்கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பள்ளி, ஊராட்சி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் ஒரே நேரத்தில் விழிப்புணர்வு பேரணி சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது