தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக போராட்டம் நடத்துகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் பதவி ஏற்ற பின் நடக்கும் முதல் போராட்டம் இதுவாகும். இதனையொட்டி கட்சி ரீதியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். புதிய மா.செக்கள் நியமிக்கப்படாத ஐந்து மாவட்டங்களில் மட்டும் நாளை போராட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டணம் உயர்வு வரை தமிழ்நாடு மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, அதிமுக அமைப்பு ரீதியான மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. மக்களை காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மடல் நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்து வாய்சவடால் வீரர்களாக தெரியும், தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களை செய்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எனவே அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.