தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவ மாணவியர் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் கல்வி பயில்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். பள்ளிகளில் சுற்றுப்புற சுகாதாரம், குடிநீர் வசதி தூய்மையான கழிவறைகள் ஆகியவற்றை சரிவர பராமரிக்க உறுதி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இருந்தால் தான் கற்றல் மற்றும் கற்பித்தல் முறையாக நடைபெறும். எனவே கட்சி சார்பற்ற முறையில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் அவரவர் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் களுக்கும், துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து அவற்றை சரி செய்வதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.