தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருச்சி, புதுக்கோட்டை, கரூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிறந்த தளமாக விளங்கும் கல்வி தொலைக்காட்சிக்காக கூடுதலாக இன்னொரு சேனலும் தொடங்கப்பட உள்ளது. அரசு பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என எந்த மீடியத்தை தேடி வருகிறார்களோ அதை கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் பத்தாயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க முடிவு செய்துள்ளோம்.
அதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2500 முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகின்றது. மேலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்ற வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.