தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொதுமாறுதல் மற்றும் விருப்ப மாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜனவரி மாதம் அரசு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நேரடி முறையை தவிர்த்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள். ஆகவே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை EMIS இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட பின் அந்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து 3 நகல்களில் தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று இன்று காலை 11 மணிக்குள் அலுவலகத்திற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் EMIS WEB PORTAL- ல் பதிவேற்றும் போது ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு முழு பொறுப்பு அந்தந்த ஆசிரியர்களே என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றும்போது மிக கவனமாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.