தமிழகம் முழுவதும் அலுவலகங்களில் வேலைப்பார்க்கும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அலுவலகங்களில் வேலைப்பார்க்கும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் 300 பேருக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.