தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கைது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கட்டாய மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்தது. அதனால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகின்ற 19ஆம் தேதி தொடங்குகிறது. அதில் கடந்த ஆட்சியில் கட்டாய மாறுதல் நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களில் தலைமையாசிரியர்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த தங்களுக்கான ஐடியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதன் ஒரு நகலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான கலந்தாய்வு நாளில் காலியாக உள்ள இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் கேட்கும் பள்ளிகளுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்.
அதில் கணவன் அல்லது மனைவியை இழந்த ஆசிரியர்களுக்கு வயதுவரம்பு கிடையாது. உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி நிரவல் கலந்தாய்வில் கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும். அவருக்கு பதிலாக அதே பள்ளியில் உள்ள அடுத்த இளையவரை பணி நிரவலுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.