தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வருகின்றன. இதற்கிடையில் 15 -18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்க 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 3 வருடங்களில் கணிசமான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் முன்னேற்பாடாக ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் “தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணிபுரியும் அனைத்து வகையான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் 2024 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து, இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது..