தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டது.
அதனால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. கொரோனா குறையாத காரணத்தால் ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
எனவே பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இனி வரும் காலங்களில் வழக்கம்போல செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதும் வகையில் நடத்த வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் அனைவருக்கும் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.