தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 12வது மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இனி வாரத்திற்கு ஒரு முறை தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 1,30,920 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,527 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.