தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் என இரண்டு நாட்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தடுப்பூசி பெற தகுதியான நபர்கள் 73 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியும், 35% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியே கொரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம் என்பதை உணர்ந்து மக்களுக்கு அவரவர்கள் பகுதியிலேயே எளிதில் கிடைத்து விடும் வகையில் வாரம்தோறும் ஒருநாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதர நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் இரண்டு தடுப்பு முகாம்களை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல்கள் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.