தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவும் வகையில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் நான்கு மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
அதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டத்தால் 9.69 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.