இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குக்கு அமலாகியுள்ளது, ஆனால் புதிய கட்டுப்பாட்டால் தங்களது வாழ்வாதாரம் குறித்து பல்லாயிரம் கேள்விகளுடன் காத்திருக்கின்றனர் தினசரி பணியாளர்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் குறிப்பாக உணவு மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சல் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும், சலூன் கடைகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் திறக்க அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு உணவகம், தேனீர் கடை, சலூன் கடை நடத்துபவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா ஊரடங்கால் பெரிய அளவில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் அவர்கள் சற்று எழுந்து விடலாம் என்று எண்ணும் போது மீண்டும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி நிற்கின்றனர்.
வட்டிக்கு வாங்கி தொழில் நடத்தினோம், திடீரென ஊரடங்கு பிறப்பித்தால் என்ன செய்வோம் என்று இவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. கட்டுப்பாடுகளுடன் தொழில் செய்ய அனுமதி தாருங்கள் என கோரிக்கை தொழிலாளர்கள் விடுத்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதை போன்று தினசரி வேலை செய்து அதைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பதில் கிடைக்கும் என நம்புவோம்.