தமிழகத்தில் திட்டமிட்டபடியே இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் மூலமாகவே எழுதினார்கள். தற்போது தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2ம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காரணத்தினால், இன்று முதல் பள்ளி, கல்லூரி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகின்றது. மேலும் பள்ளிகளில் தடுப்பூசி மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி கல்லூரிகளுக்கு முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் வாரத்திற்கு ஆறு நாட்கள் செயல்படும் என்றும், மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டும் அமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் மாணவர்கள் முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி, அடிக்கடி கை கழுவுவது போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகளில் என்ற அடிப்படையில் காலை 9:30 மணி முதல் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகள் முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்களிடையே உற்சாகம் உள்ளது. இது மாணவர்களுக்கு மன ரீதியாக ஊக்கமளிக்கும் என்று மனநல வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.