கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால், பொதுமக்கள் கூட்டம் கூடுவது மற்றும் முக கவசம் முறையாக அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் இன்றைய தினம் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.