தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள பல ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க கோரிய வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தண்ணீர் மிகவும் அவசியமானது. தற்போது மழை காரணமாக நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என தெரிவித்தனர்.
இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு கண்காணிப்போம் என்றும் தெரிவித்தனர். அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மனுதாரர் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல் நீர்நிலைகளில் குப்பை கொட்டும் மைதானம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசு ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்ற அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதனை தவறும் பட்சத்தில் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதேசமயம் எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.