பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தினால் 2 நாட்கள் போக்குவரத்து, வங்கி மற்றும் ஏ.டி.எம் சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து கழகமும், வேலை நிறுத்தத்தில் மின்சார ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என மின்சார வாரியமும் அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் உத்தரவை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.