தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வருகின்ற சைலேந்திரபாபு, ரவுடிசம் மற்றும் கட்டபஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து இரண்டு கொலைகள் நடந்தது. அதனைப் போலவே திருநெல்வேலியில் சென்றவாரம் போலீசாரின் தம்பி ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார்.
மேலும் தேனி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் சில ரவுடிக் கும்பல்கள் பழிவாங்குவதற்காக தொடர்ந்து கொலைகளை செய்கிறார்கள். இந்நிலையில் இந்த ரவுடி கும்பலை மொத்தமாக அழிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று இரவில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னை, மதுரை,திண்டுக்கல், நெல்லை ,தேனி மற்றும் கோவை போன்ற பல மாவட்டங்களில் நேற்று இரவு சோதனை செய்யப்பட்டு 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் சென்னையில் மட்டும் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள்கள், கத்திகள்,3 துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாடு காவல்துறையினர் மேற்கொண்ட ஆப்ரேஷன்களில் இந்த ஆபரேஷன் பெரிதுதாக கருதப்படுகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.