தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் மட்டும் அனுமதி. மூன்று வகையான மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பேக்கரி, ஹோட்டல்கள், மளிகைப் பொருள்கள் இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் கொரோனா பரவும் அபாயம் காரணமாக உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், பேக்கரி பொருட்களை கடைகளில் பார்சல் செய்யும் போது பயன்படுத்தப்படும் உறைகளில் எச்சில் தொட்டு எடுக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பாலிதீன் உறைகளை திறக்கும் போது வாயால் ஊதுவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.