தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்,அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அரசு அனுமதி அளித்துள்ளது