தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக திமுக அரசு குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வர் பதவியேற்றார். தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று சுமார் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கு பின் தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை திட்டம் இதுவரையிலும் அமலுக்கு வரவில்லை. இதுதொடர்பாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக-பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. தற்போது குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.
அதிலும் குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போன்றோரின் வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் மக்களுக்கு பரிசு வழங்க திமுக திட்டமிட்டு இருக்கிறது. ஆகவே குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்க இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.