தமிழகத்தில் கோவில் நிலங்களை அபகரிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரையிலும் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரையிலும் 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 540.39 ஏக்கர் நிலங்கள், 496.1748 கிரவுண்ட் சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்ட் கட்டிடங்கள், 46.2077 கிரவுண்ட் திருக்குளக்கரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதன் தற்போதைய மதிப்பு ரூபாய் 2,043 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பகோணம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திருவானைக்காவல் அரங்கநாதர் சுவாமி கோவிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தமான 55 செண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி மற்றும் நில அளவை கல் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.