தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் மோசடியை தடுக்கும் வகையில் பதிவர்களில் 6 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆள்மாறாட்டம் மற்றும் தரகர்கள் நடமாட்டத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் சமீப காலமாகப் பல இடங்களில் மோசடியாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. பத்திரங்களை ஸ்கேன் செய்து கணினியில் பதிவேற்றம் செய்தாலும் குறிப்பிட்ட காலம் வரை அச்சுப் பிரதிகள் குறிப்பேடுகளும் பராமரிக்கப்படுகின்றன. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது பல இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அறைகளிலிருந்து கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பதிவு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க பதிவுத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இனி எந்த வித மோசடிகளும் நடைபெறாத வகையில் கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது.