தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு, வருவாய், அயநியச் செலவாணி ஈட்டுதல் மற்றும் மண்டல வாரியாக வளர்ச்சி ஆகிய பொருளாதார மேம்பாட்டிற்காக சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் சுற்றுலாத் துறையில் முன்னணி மாநிலமாக தோன்றுகிறது. 2019 ஆம் ஆண்டில் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடமும் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இரண்டாவது இடம் தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை தலைமை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலாத் துறை அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மானிய கோரிக்கையின் போது அறிக்கை செய்யப்பட்ட அறிவிப்புகள் பற்றிய நிலை மற்றும் பல திட்டங்கள் குறித்த அரசாணை வேண்டும் என்று அரசிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
அதில் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் இணைப்பதற்காக கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுலா தொடங்குவதற்கு ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் நிலத்தைத் தேர்வு செய்து தலஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் நிலத்திற்கான தல ஆய்வு விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழக சுற்றுலாத் துறையில் தனித்துவத்தை நிலைப்படுத்துவதற்காக சுற்றுலா தளங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் இடங்களை உருவாக்கி சுற்றுலா பயணிகள் தங்கும் காலத்தை அதிகரித்து, தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக போன்ற திட்டங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.